Thursday, 20 May 2021

நட்புக்கு மரியாதை - சிறுகதை

 

விக்ரமின் கைபேசி அடித்தது. விக்ரம் எடுத்து கைபேசியின் திரையில் தெரிந்த பெயரை பார்த்தான். வினிதா காலிங் என்று வந்தது.

வினிதா விக்ரமின் நெருங்கிய தோழி. எப்போதும் ஒன்றாக இருப்பவர்கள். பள்ளி படிப்பில் தொடங்கிய அவர்களின் நட்பு ஒரே கல்லூரியில் சேர்ந்து படித்து, இப்போது ஒரே நிறுவனத்தில் ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வரை தொடர்கிறது.

மணி பதினொன்று இப்போ எதுக்கு போன் பண்றா என்று எண்ணி கொண்டே அழைப்பை எடுத்தான்.

மறுமுனையில் வினிதா உற்சாகமாக “விக்ரம் உன்கிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும், அதுவும் உடனே சொல்லணும்னு தான் கால் பண்ணேன்”

ம்.. சொல்லு வினி என்றான்.

“ விக்ரம், நாளைக்கு காலைல என்ன பொண்ணு பார்க்க வாரங்களாம், அதுவும் காலைல எட்டு மணிக்கே வர்றாங்களாம்.இப்பதான் போன் பண்ணி திடிர்னு சொல்றாங்க. உடனே உனக்குத்தான் நான் முதல்ல போன் பண்றேன்.” என்றாள் வினிதா.

“ அப்படியா “ என்றான் விக்ரம்.அவன் குரலில் ஏதோ ஒரு சோகம் வெளிப்பட்டது. வினிதாவிற்கும் அது தெளிவாக தெரிந்தது.

“என்ன ஆச்சு விக்ரம் உனக்கு இதில் விருப்பமில்லையா?” என்றாள் வினிதா.

சில நொடிகள் அமைதியாக இருந்த விக்ரம், பின் குரலை சரி செய்து கொண்டு பின் பேச ஆரம்பித்தான்.

வினிதா உன்கிட்ட ஒரு விசயத்த சொல்லாம மறச்சிட்டேன். அத சொன்ன நீ எப்படி எடுத்துக்குவனு தெரியல.

“என்ன விக்ரம்? என்னனு சொல்லு” படபடப்பாக கேட்டாள் வினிதா.

“அது வந்து கொஞ்ச நேரத்துக்கு முன்னால தான் அப்பாவுக்கு நெஞ்சு வலின்னு ஆஸ்பத்திரில சேர்த்தோம்.உன்கிட்ட சொன்ன நீ உடனே ஓடி வந்துருவ அதிலும் இப்ப உன்ன பொண்ணு பார்க்க வர போறாங்க..”

“ஆனா நானும் அங்க வரமுடியாத சூழ்நிலை அதுதான் எனக்கு மனசு ஒரு மாதிரியா இருக்கு” என்றான் விக்ரம்.

மறுமுனையில் வினிதா ”விக்ரம் நம்ம ரெண்டு பேருக்கும் நடுவில் எந்த மறைவும் இருக்க கூடாது.நாளைக்கு பொண்ணு பார்க்க வரும் போது நீ என் கூட இருந்தா தைரியமா இருக்கும். சரி நீ அப்பவ பார்த்துக்க நான் மாப்பிளை வீடு வந்துட்டு போனதும் அங்க வரேன்” என்று சொல்லி போனை வைத்தாள் வினிதா.

இருவருக்கும் இப்போது மனது சரியில்லை. விக்ரமுக்கு அந்த நேரத்தில் வினிதாவுடன் இருக்க முடியவில்லையே என்ற வருத்தம்.வினிதாவுக்கோ விக்ரம் அப்பா ஆஸ்பத்திரில இருக்கும் போது நாம் உடனே போக முடியவில்லையே என்ற வருத்தம்.

விடிந்தது. வாங்க தம்பி என்றாள் வினிதாவின் அம்மா. வினிதா யாரு வந்துருக்காங்கனு பாரு என்றாள்.வினிதா வந்து பார்த்தாள் விக்ரம் அங்கு நின்று கொண்டு இருந்தான்.

“ஹே விக்ரம், என்ன இங்க வந்து நிக்குற அதுவும் ஏழு மணிக்கு” என்றாள் வினிதா.

உன்ன பொண்ணு பார்க்க வராங்கனு சொன்னேல அதான் என் நண்பன் ஒருத்தன ஆஸ்பத்திரில அப்பா பக்கத்துல உட்கார வச்சிட்டு நான் இங்க வந்தேன். ஆனா நீ ஏன் இன்னும் பொண்ணு மாதிரி தயராகம சாதாரணமாக இருக்க” என்றான்.

“சொல்றேன் விக்ரம். வா.. நாம ஆஸ்பத்திரிக்கு போகலாம் அங்க போய் நான் சொல்றேன்” என்றாள் வினிதா.

வினிதாவுடன் ஆஸ்பத்திரிக்கு சென்று தன் தந்தைக்கு  மருத்துவமனை ஒதுக்கி இருக்கும் அறைக்கு அழைத்து சென்றான்.அவன் தந்தைக்கு அருகில் விக்ரமின் நண்பன் நின்று கொண்டு இருந்தான்.

டாக்டர் இப்ப வந்து பார்த்துட்டு போனாரு. ஒரு ஊசி போட்டுட்டு போயிருக்காங்க. இரண்டு மணி நேரம் கழிச்சு வந்து பாக்குறேன்னு சொல்லி இருக்காரு. இப்பதான் அப்பா கொஞ்சம் நிம்மதியா தூங்குறாரு என்றான்.

விக்ரம் வினிதாவை நோக்கி இப்பவாது சொல்லு என்ன நடந்துச்சு என்றான்.

ஒரு நிமிஷம் இருங்க ஒரு போன் பண்ணிட்டு வரேன் என்று சொல்லிவிட்டு வெளியில் சென்றால் வினிதா.

வினிதா திரும்பி வரும்போது வினிதாவுடன் அவள் அம்மா அப்பா, மேலும் மூவர் ஒரு குடும்பமாய் வருவதை பார்த்தான்.

வினிதா விக்ரமை பார்த்து “ விக்ரம் இவர்தான் அர்ஜுன் , இவர்தான் மாப்பிள்ளை இவுங்க அவரோட அம்மா, அப்பா. உங்கிட்ட பேசுன உடனே இரவே நான் அர்ஜுன்கிட்ட பேசிட்டேன். இந்த சுழ்நிலையில பொண்ணு பார்க்க வரும்போது நீ வர முடியாததால ஆஸ்பத்திரில உன் முன்னாடி சிம்பிளா மீட் பண்ணலாம்னு சொன்னேன். அவரும் சரின்னு சொல்லிடாரு.

காலைல நீ உங்க அப்பாவ இந்த நிலைமைல விட்டுடு எனக்காக ஓடோடி வந்ததையும் இவர்கிட்ட சொல்லிட்டேன்.

அவருக்கு பொண்ணு என்ன விட நம்ம பிரெண்ட்ஷிப் ரொம்ப பிடிசுருக்காம் அதனால கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டாரு என்றாள்.  

விக்ரம் அப்படியே மெய் சிலிர்த்து போய் விட்டான்.

    முற்றும் 


- பாலா 

 

                 

    

      

                 

 

                     

          

      

 

         

 

 

 

Wednesday, 19 May 2021

ஆயுள் வரை காத்திருப்பேன் - சிறுகதை

 சரியாக மணி ஐந்து.

ஆட்டோவில் வந்து பூங்காவின் வாசலில் இறங்கினாள் சீதா. இப்போது ராம் வரும் நேரம் தான், கொஞ்சநேரம் இங்கேயே நின்று விட்டு ராம் வந்ததும் உள்ளே செல்லலாம் என்று நினைத்து இருந்தாள்.

ராம் சீதாவின் காதலன் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். ஐந்து மணிக்கு அவன் அலுவலகம் முடிந்து விடும்.ஒரு பத்து நிமிடத்தில் வந்து விடும் தூரம் தான். அவன் வருவதை எண்ணி உற்சாகமாக இருந்தாள் சீதா.

மணி ஐந்து முப்பது. மணியை பார்த்த சீதாவுக்கு கொஞ்சம் பதற்றம் ஆரம்பித்து விட்டது. எதாவது டிராபிக்ல் மாட்டி இருக்க கூடும் இப்போது வந்து விடுவான் கொஞ்சம் காத்திருப்போமே என்று நினைத்தவளுக்கு நேரம் ஆக ஆக எரிச்சலும் தொற்றி கொண்டது.

 பொதுவாக வண்டி ஓட்டும் போது யாரும் போன் செய்தால் ராம் எடுத்து பேச மாட்டான். ஆனால் இப்போது வேறு வழியில்லை போன் செய்து தான் ஆக வேண்டும்.” சே! எவ்வளவு ஆசையா வந்தேன் கல்யாணத்த பத்தி பேசி முடிவு பண்ணனும். அதுக்கு அப்புறம் எங்க அப்பவ அறிமுக படுத்தி பேச வைக்கணும்னு நெனச்சேன். இன்னைக்கு பார்த்து லேட் பண்றானே” என்று மனதுக்குள் நினைத்தாள்.

அவளுடைய ஹேன்ட் பேக்கில் இருந்து போனை எடுத்தாள். என் செல்லம் என்ற பெயரில் பதிந்து வைத்திருந்த அந்த எண்ணுக்கு போன் செய்தாள்.மணி அடித்து கொண்டே இருந்தது மறுமுனையில் இருந்து பதில் வரவில்லை.

சீதாவின் கண்களில் கோபம் எட்டி பார்த்தது. பூங்காவில் போவோர் வருவோர் இவளையே வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது. அவள் கண்களில் சிறிதாக கண்ணீர் எட்டி பார்த்தது.

அவன் வரும் வழியை எதிர் பார்த்து பார்த்து நேரம் போனது. தூரத்தில் இருந்து வரும் வண்டிகள் அனைத்தும் அவன் வண்டி போல தோன்றியது.

அந்த ஒவ்வொரு வண்டியும் அவளை கடந்து போகும் வரை அவனாக இருக்க கூடும் என்று எண்ணி எண்ணி ஏமாந்தாள்.

மணி ஏழு ஆகியது. இனியும் இங்கே இருக்க வேண்டாம் கிளம்பி வீட்டுக்கு போவோம் என்று நினைத்தாள். அப்போது அவளுக்கு ஒரு போன் வந்தது.

என் செல்லம் என்ற பெயரில் இருந்து அழைப்பு வந்தது. அவன்தான் போனை எடுக்க கூடாது என்று நினைத்தாள். ஆனால் முடியவில்லை. போனை எடுத்தாள், மறுமுனையில் ராம், “ சீதா ஒரு பத்து நிமிசத்துல வந்துருவேன் வந்து நான் நடந்தத சொல்றேன் என்று போனை வைத்து விட்டான்.

மணி ஏழு பத்து. பைக்கை நிறுத்தி விட்டு வேக வேகமாக ஓடி வந்தான் சீதாவை நோக்கி. “ஹலோ சீதா நான் சொல்றது என்னனு கொஞ்சம் பொறுமையா கேளு என்றான்.

ஆனால் சீதா அதை கேட்கும் மன நிலையில் இல்லை. அவள் கோபத்துடன் “இனி பேச ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டு கோபத்தில் ஒரு ஆட்டோவை வழி மறித்து அதில் ஏறி சென்று விட்டாள்.

ஆட்டோவில் ஏறியதும் அவளுக்கு ஒரு போன் வந்தது மறுமுனையில் அவளின் அம்மா “எங்கடி இருக்க? உங்க அப்பாவுக்கு ஒரு விபத்துல அடி பட்டுடுச்சு. ஆஸ்பத்திரில சேர்த்து இருக்கு, நேரா ஆஸ்பத்திரிக்கு வந்துடு” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.

இப்போது ராமின் மீது அவளுக்கு கோபம் இன்னும் அதிகரித்தது. அப்பாவுக்கு வேற இப்படி ஆயிடுச்சு ஆனா அவனுக்காக இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்து விட்டானே என்று எண்ணி கொண்டே ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தாள்.

அப்பாவின் காலில் கட்டு போட பட்டிருந்தது.பதறியபடி ஓடி வந்தாள் சீதா.

அதனை கண்ட சீதாவின் அப்பா குமரேசன், “ அம்மா ஒண்ணுமில்லாம ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கும் போது ஒரு வண்டி இடிச்சுட்டு நிக்காம போயிட்டான். அதுல நிலை தடுமாறி விழுந்ததுல ஒரு கல்லுல மோதி காலுல அடி பட்டுருச்சு.” என்றவர்.

மேலும் தொடர்ந்தார் “கால என்னால ஊன்ற முடியவில்லை. காலுல இருந்து ரத்தம் வேற கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.”

அந்த நேரம் பார்த்து ஒருத்தர் நடந்த விபத்த பார்த்துட்டு இங்க கொண்டு வந்து சேர்த்தார். அவர் ஐடி ஆபீஸ்ல போன மறந்து வச்சுட்டு வந்துட்டாராம். அதை திரும்ப எடுத்திக்கிட்டு போக வந்தாராம்.

நான் அடிபட்டு கிடக்குறத பார்த்துட்டு அவரு போன கூட எடுக்க போகாம இங்க வந்து என்ன சேர்த்துவிட்டு திரும்ப போறேன்னு சொன்னாரு.

ரொம்ப நல்ல பையன், அவர் பேரு ராம்ன்னு சொன்னாரு. அவரு போன எடுத்திட்டு பூங்காவில அவருக்காக ஒரு பொண்ணு காத்திருக்கும்னு சொல்லிவிட்டு உன் அம்மா இங்க வரவும் தான் அவர் போறார்.” என்றார் அப்பா.

இப்போது தான் சீதாவுக்கு புரிந்தது. அந்த ராம் ஏன் வர அவ்வளோ நேரம் ஆச்சு மேலும் போன் எடுக்கவில்லை என்று மேலும் உனக்காக இன்று ஒரு நாள் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்று எண்ணிக்கொண்டே அவனுக்கு போன் செய்ய வெளியில் ஓடினாள்.  


- பாலா


                     

          

      

 

         

 

 

 

 

Tuesday, 18 May 2021

கற்பனை கோடுகள் - சிறுகதை

 கற்பனை கோடுகள்

வாசலையே பார்த்தவாறு இருந்தாள் துர்கா. அவள் கணவன் வரும் நேரம் தான், எப்போதும் ஒன்பது மணிக்கு வரும் கணவன் இன்றோ மணி பத்தாகியும் இன்னும் வரவில்லை.

இன்று காலை வேறு அவள் பார்த்த ஒரு சம்பவம் திரும்ப திரும்ப வந்து மனதில் போராட்டத்தை அதிகபடுத்தியது.

காலையில் கணவன் வேலைக்கு சென்ற பிறகு காய்கறிகள் வாங்க கடை வீதிக்கு சென்றாள். அப்போது அங்கு ஒரு கடையின் முன்பு அவள் கண்ட காட்சிதான் அவள் மனதை உறுத்தியது.

அவள் கணவன் சிவா அங்கு ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டு இருந்தான். துர்காவும் தூரத்தில் இருந்து அந்த பெண்ணின் முகத்தை உற்று நோக்கினாள். ஆனாலும் அந்த பெண்ணை எங்கும் இதற்கு முன்பு பார்த்ததில்லை.

அவள் கணவனோ அந்த பெண்ணின் கையில் கொஞ்சம் பணத்தை வற்புறுத்தி கொடுப்பதை பார்த்தாள். அது மேலும் அவள் சந்தேகத்தை வலுவாக்கியது.

வேலைக்கு செல்ல வேண்டிய நேரத்தில் இங்கு என்ன பேசிக்கொண்டு இருக்கிறார் இரவு வீட்டுக்கு திரும்பி வரும்போது விசாரிக்க வேண்டும் சும்மா விட கூடாது. “அவளுடன் அவருக்கு என்ன உறவு என்று விசாரிக்காமல் விடமாட்டேன்’” என்று மனதுக்குள் எண்ணியவாறே அவள் கணவன் அங்கிருந்து நகர்ந்ததை கண்டு வீட்டுக்கு வந்தாள்.

வீட்டுக்கு வந்தாலும் துர்காவுக்கு வேலை ஓடவில்லை அதே சிந்தனையாக இருந்தாள் .இப்போது நேரம் வேறு அதிகமாகி விட்டதால் கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

சிவாவுக்கு இன்று தொழிற்சாலையில் ஒரு முக்கியமான வேலை. உற்பத்தி செய்ய பயன்படும் ஒரு முக்கியமான இயந்திரம் ஒன்று திடிரென பழுதாகி விட்டது.அதனால் மொத்த உற்பத்தி பாதிக்கப்பட்டுவிட்டது.

அதனை சரி செய்த பிறகே வீட்டிற்கு செல்ல கூடிய சூழ்நிலை எனவே அதனை சரி செய்யும் பொறுப்பில் ஈடுபட்டிருந்தான்   

மணி பதினொன்று. சிவா வீட்டிற்குள் நுழைந்தான். நுழைந்ததும் மனைவியிடம் “ சாப்பாடு எடுத்து வை நான் குளிச்சுட்டு வந்துடுறேன் என்றான்.”

துர்கா அவனிடம் “ நில்லுங்க எங்க போய்ட்டு வர்றீங்க? என்றாள்.

“வேற எங்க போவேன் வேலைக்குதான்” என்றான்.   

‘ஓ அப்படியா, அப்ப அவ யாரு’ என்றாள். கோபத்தில் அவள் முகம் சிவந்து இருந்தது .

ஏற்கனவே இயந்திரத்துடன் போராடி சரி செய்து கலைத்து போய் வந்திருந்த சிவா எதை பற்றி கேட்கிறாள் என்று யோசிக்க முடியாமல் “ முதலில் சாப்பாடு எடுத்து வை , பிறகு பேசலாம் என்றான்.

“இப்ப சாப்பாடா முக்கியம் எனக்கு உண்மை தெரிஞ்சாகனும், காலைல கடை வீதில ஒரு பொண்ணோட பேசிக்கிட்டு இருந்தீங்க அவ கையில பணம் குடுத்தீங்களே அவ யாரு?” என்றாள் கத்தியபடி

“ அவுங்களா !  போன வாரம் உங்க அப்பா ஆக்சிடென்ட் ஆகி ஆஸ்பத்திரில சேர்த்தாங்கள” என்று சிவா ஆரம்பிக்க...

“நிறுத்துங்க அந்தக் கதை இப்போ எதுக்கு நான் கேட்டதுக்கு பதில் சொல்லுங்க” என்று கத்தினாள் மீண்டும்.  

கொஞ்சம் முழுசா கேட்டுட்டு பேசு துர்கா என்றவாறு தொடர்ந்தான். அன்னைக்கு ஆக்சிடென்ட் ஆகி ரோட்ல கிடந்த உங்க அப்பாவ அவுங்கதான் ஹாஸ்பிட்டல்ல சேர்த்து இருக்காங்க. உங்க அப்பா பர்ஸ்ல இருந்த என்னோட விசிடிங் கார்ட பார்த்து அத ஹாஸ்பிட்டால கொடுத்து தகவல் சொல்ல சொல்லிட்டு அவுங்க குழந்தைய ஸ்கூல்ல இருந்து கூட்டிட்டு வர நேரமாச்சுன்னு சொல்லிட்டு அவுங்க போன் நம்பர் ஹாஸ்பிட்டல்ல கொடுத்துட்டு போயிருக்காங்க. அட்மிஸ்ஸன்க்கு இரண்டு ஆயிரம் பணம் அவுங்கதான் கட்டிருக்காங்க.

அந்த பணத்த திருப்பி கொடுத்துட்டு அவுங்களுக்கு  நன்றி சொல்ல முயற்சி பண்ணி, இன்னைக்குதான் அவுங்கள சந்திக்க முடிஞ்சது. அதுவும் அவுங்க அவசர வேலையா போறதால அவுங்கள நம்ம வீட்டுக்கு கூப்பிட முடியல எனக்கும் ஒரு முக்கியமான வேலை. இரவு வந்து உன்கிட்ட அவுங்கள சந்திச்சத உங்கிட்ட பொறுமையா சொல்லலாம்னு இருந்தேன்.

 

துர்கா கண்ணீருடன் அவன் காலை பிடித்து என்னை மன்னிச்சுருங்க நான் உங்களை தப்பா நினைச்சிட்டேன் என்று கண்ணீர் விட்டாள்.       


#tamilstories, #positivestories

  

  

 

 

 

 

அந்த ஒரு நாள் -

 மணி இரவு பதினொன்றை நெருங்கி கொண்டிருந்தது.

படுக்கையில் கிடந்த ராகவ் இரண்டு தலையணைகளை ஒன்றின் மீது ஒன்றாய் உயரமாக 
வைத்துக் கொண்டு தலையை உயர்த்தி வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையில் ஆழ்ந்து
 இருந்தான்.

உறக்கம் வர மறுத்தது. இப்படியும் அப்படியும் புரண்டு பார்த்தும் உறக்கம் வரவில்லை.

விடிந்ததும் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

டாக்டர் ராகவிடம் சொன்னது அவனுக்கு ஞாபகம் வந்தது, " ராகவ் விபத்தில் அடிபட்ட 
உங்கள் மகளுக்கு நாளை சிறிய ஆபரேசன் செய்ய வேண்டும். ஒரு லட்சம் நாளைக்கு காலைல
 கட்டிடுங்க நாளைக்கே ஆபரேசன் செய்திடலாம்."

ஒரு சிறிய நிறவனத்தில் மாதம் 15000 சம்பளத்தில் வேலை பார்த்து வந்தான் ராகவ். 

ஆனால் இப்போது பொதுமுடக்கம் உள்ளதால் அந்த வேலையும் இல்லை. அதை நம்பி இருந்த 
வருமானமும் இல்லை. 

இந்த சூழ்நிலையில் யாரும் உதவி செய்யும் நிலையில் இல்லை.

இப்படியும் அப்படியும் புரண்டு படுத்தான். நேரத்தை பார்த்தான் மணி மூன்று.

அசதியில் சற்றே கண் அசைந்தான்.

மனதால் தூங்க முடியாவிட்டாலும் கண்கள் தூங்க ஆரம்பித்தன.

அவனுடைய தொலைபேசி ஒலிக்கிறது.

ஏதோ ஒரு புது நம்பர். மணி வேறு ஆறு ஆகிவிட்டது.

பதட்டத்துடன் போனை எடுத்தான்.

எதிர்முனையில் இருந்து குரல்" அண்ணா நல்லா இருக்கிறீங்களா? நான் அன்பு பேசுறேன். 
போன வருஷம் எனக்கு கல்லூரி கட்டணம் கட்ட முடியாமல் இருந்த போது 
நீங்க 15000 கொடுத்து உதவி பண்ணீங்களே."

ராகவ் ஞாபகம் வந்தவனாக " ஆமாம் தம்பி நல்லா இருக்கீங்களா என்றான்."

அன்பு பதிலுக்கு " அண்ணே நல்லா இருக்குறேன். எனக்கு வேலை கிடைச்சு நேத்துதான் 
முதல் மாசம் சம்பளம் ஒரு லட்சம் வாங்கினேன்."

ராகவ் பதிலுக்கு " அப்படியா, ரொம்ப நல்ல விசயம்" என்றான். 

அன்பு பதிலுக்கு " அண்ணே நீங்க‌ பணம் கொடுக்கலேனா என்னால படிப்ப முடிச்சு இருக்க 
முடியாது. நீங்க எனக்கு உறவும் இல்ல ஆனாலும் உதவி செஞ்சீங்க....அதனால இந்த 
முதல் மாசம் சம்பளத்த உங்களுக்கே கொடுத்துறேன். உங்க கூகுள் பே நம்பர் 
சொல்லுங்க என்றான்."

இரவு முழுவதும் தூக்கம் வராமல் உழன்ற ராகவ்க்கு இதை கேட்டதும் 
கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது.

அன்புவிடம் நம்பர் கொடுத்து விட்டு மருத்துவமனை செல்ல தயாரானான்.




ஒரு கணவனும் மனைவியும்

  ஒரு கணவனும் மனைவியும் மாலைப்பொழுதில் நடைப் பயிற்சியை முடித்துக்கொண்டு வீட்டிற்கு திரும்பினர். சற்று நேரத்திலேயே இருட்டியதால் இருவரும் வேகம...