சரியாக மணி ஐந்து.
ஆட்டோவில் வந்து பூங்காவின் வாசலில் இறங்கினாள் சீதா. இப்போது ராம் வரும் நேரம் தான், கொஞ்சநேரம் இங்கேயே நின்று விட்டு ராம் வந்ததும் உள்ளே செல்லலாம் என்று நினைத்து இருந்தாள்.
ராம் சீதாவின் காதலன் ஒரு ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறான். ஐந்து மணிக்கு அவன் அலுவலகம் முடிந்து விடும்.ஒரு பத்து நிமிடத்தில் வந்து விடும் தூரம் தான். அவன் வருவதை எண்ணி உற்சாகமாக இருந்தாள் சீதா.
மணி ஐந்து முப்பது. மணியை பார்த்த சீதாவுக்கு கொஞ்சம் பதற்றம் ஆரம்பித்து விட்டது. எதாவது டிராபிக்ல் மாட்டி இருக்க கூடும் இப்போது வந்து விடுவான் கொஞ்சம் காத்திருப்போமே என்று நினைத்தவளுக்கு நேரம் ஆக ஆக எரிச்சலும் தொற்றி கொண்டது.
அவளுடைய ஹேன்ட் பேக்கில் இருந்து போனை எடுத்தாள். என் செல்லம் என்ற பெயரில் பதிந்து வைத்திருந்த அந்த எண்ணுக்கு போன் செய்தாள்.மணி அடித்து கொண்டே இருந்தது மறுமுனையில் இருந்து பதில் வரவில்லை.
சீதாவின் கண்களில் கோபம் எட்டி பார்த்தது. பூங்காவில் போவோர் வருவோர் இவளையே வேடிக்கை பார்ப்பது போல் இருந்தது. அவள் கண்களில் சிறிதாக கண்ணீர் எட்டி பார்த்தது.
அவன் வரும் வழியை எதிர் பார்த்து பார்த்து நேரம் போனது. தூரத்தில் இருந்து வரும் வண்டிகள் அனைத்தும் அவன் வண்டி போல தோன்றியது.
அந்த ஒவ்வொரு வண்டியும் அவளை கடந்து போகும் வரை அவனாக இருக்க கூடும் என்று எண்ணி எண்ணி ஏமாந்தாள்.
மணி ஏழு ஆகியது. இனியும் இங்கே இருக்க வேண்டாம் கிளம்பி வீட்டுக்கு போவோம் என்று நினைத்தாள். அப்போது அவளுக்கு ஒரு போன் வந்தது.
என் செல்லம் என்ற பெயரில் இருந்து அழைப்பு வந்தது. அவன்தான் போனை எடுக்க கூடாது என்று நினைத்தாள். ஆனால் முடியவில்லை. போனை எடுத்தாள், மறுமுனையில் ராம், “ சீதா ஒரு பத்து நிமிசத்துல வந்துருவேன் வந்து நான் நடந்தத சொல்றேன் என்று போனை வைத்து விட்டான்.
மணி ஏழு பத்து. பைக்கை நிறுத்தி விட்டு வேக வேகமாக ஓடி வந்தான் சீதாவை நோக்கி. “ஹலோ சீதா நான் சொல்றது என்னனு கொஞ்சம் பொறுமையா கேளு என்றான்.
ஆனால் சீதா அதை கேட்கும் மன நிலையில் இல்லை. அவள் கோபத்துடன் “இனி பேச ஒன்றும் இல்லை” என்று கூறிவிட்டு கோபத்தில் ஒரு ஆட்டோவை வழி மறித்து அதில் ஏறி சென்று விட்டாள்.
ஆட்டோவில் ஏறியதும் அவளுக்கு ஒரு போன் வந்தது மறுமுனையில் அவளின் அம்மா “எங்கடி இருக்க? உங்க அப்பாவுக்கு ஒரு விபத்துல அடி பட்டுடுச்சு. ஆஸ்பத்திரில சேர்த்து இருக்கு, நேரா ஆஸ்பத்திரிக்கு வந்துடு” என்று சொல்லிவிட்டு போனை வைத்து விட்டாள்.
இப்போது ராமின் மீது அவளுக்கு கோபம் இன்னும் அதிகரித்தது. அப்பாவுக்கு வேற இப்படி ஆயிடுச்சு ஆனா அவனுக்காக இவ்வளவு நேரம் காத்திருக்க வைத்து விட்டானே என்று எண்ணி கொண்டே ஆஸ்பத்திரிக்கு வந்து சேர்ந்தாள்.
அப்பாவின் காலில் கட்டு போட பட்டிருந்தது.பதறியபடி ஓடி வந்தாள் சீதா.
அதனை கண்ட சீதாவின் அப்பா குமரேசன், “ அம்மா ஒண்ணுமில்லாம ரோட்ல நடந்து வந்துகிட்டு இருக்கும் போது ஒரு வண்டி இடிச்சுட்டு நிக்காம போயிட்டான். அதுல நிலை தடுமாறி விழுந்ததுல ஒரு கல்லுல மோதி காலுல அடி பட்டுருச்சு.” என்றவர்.
மேலும் தொடர்ந்தார் “கால என்னால ஊன்ற முடியவில்லை. காலுல இருந்து ரத்தம் வேற கொட்ட ஆரம்பிச்சுடுச்சு.”
அந்த நேரம் பார்த்து ஒருத்தர் நடந்த விபத்த பார்த்துட்டு இங்க கொண்டு வந்து சேர்த்தார். அவர் ஐடி ஆபீஸ்ல போன மறந்து வச்சுட்டு வந்துட்டாராம். அதை திரும்ப எடுத்திக்கிட்டு போக வந்தாராம்.
நான் அடிபட்டு கிடக்குறத பார்த்துட்டு அவரு போன கூட எடுக்க போகாம இங்க வந்து என்ன சேர்த்துவிட்டு திரும்ப போறேன்னு சொன்னாரு.
ரொம்ப நல்ல பையன், அவர் பேரு ராம்ன்னு சொன்னாரு. அவரு போன எடுத்திட்டு பூங்காவில அவருக்காக ஒரு பொண்ணு காத்திருக்கும்னு சொல்லிவிட்டு உன் அம்மா இங்க வரவும் தான் அவர் போறார்.” என்றார் அப்பா.
இப்போது தான் சீதாவுக்கு புரிந்தது. அந்த ராம் ஏன் வர அவ்வளோ நேரம் ஆச்சு மேலும் போன் எடுக்கவில்லை என்று மேலும் உனக்காக இன்று ஒரு நாள் மட்டுமல்ல வாழ்நாள் முழுவதும் காத்திருப்பேன் என்று எண்ணிக்கொண்டே அவனுக்கு போன் செய்ய வெளியில் ஓடினாள்.
- பாலா
No comments:
Post a Comment